புதுடெல்லி
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையாக உருவெடுத்து உள்ளது.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் அருகே உள்ள தர்யாகஞ்ச் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) திரண்ட போராட்டக்காரர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் மீது கற்களை வீசியும், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கும் தீவைத்து கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று அவர்கள் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தங்களை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டுமென 15 பேரின் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தர்யாகஞ்ச் காவல் நிலையத்தில் காத்திருந்த கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள்
மேற்கண்ட 15 பேரும் எதற்காக கைது செய்யப்பட்டனர் என அரசுதரப்பு வக்கீலை மாஜிஸ்திரேட் கபில் குமார் கேட்டார். போராட்டத்தின்போது இவர்கள் கற்களை வீசியதாகவும் இதில் போலீஸ் துணை கமிஷனர் உள்பட பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இவர்கள்தான் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான எவ்வித வீடியோ ஆதாரமும் போலீசாரிடம் இல்லாத நிலையில் ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என எதிர்தரப்பு வக்கீல் ரெபேக்கா ஜான் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் 15 பேரையும் இன்னும் இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது. மேலும் அவர்களின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தவிட்டது.
P.M.சுந்தரமூர்த்தி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
0 Comments