Header Ads Widget

இப்தார் நோன்புத் திறப்பு விழாவில் மணவை தமிழ்மாணிக்கம் பெருமிதம்

மணப்பாறை மனிதநேயம் தழைத்தோங்கும் மண் இப்தார் நோன்புத் திறப்பு விழாவில் மணவை தமிழ்மாணிக்கம் பெருமிதம்...!

மணப்பாறை இஸ்லாமிய சகோதரர்களால் 25-ஆவது வார்டு பாத்திமா மலை ஈத்கா திடலில் மஹாராஜா பக்ருதீன் தலைமையில் நடந்த இப்தார் நோன்புத் திறப்பு விழாவில் பங்கேற்று, மதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் பங்கேற்றுப் பேசியதாவது.

மணப்பாறை எப்போதும் மனிதநேயம், மதநல்லிணக்கம் காக்கும் ஊராக இருப்பது நமக்குப் பெருமை, இந்த ஊரில் அனைத்துக் கட்சிகள், அனைத்து சாதியினர், அனைத்து மதத்தினர் வாழ்கின்றார்கள். தேர்தலில் போட்டி இருக்கும். தேர்தல் முடிந்துவிட்டால் கட்சிகளுக்குள் சண்டை இருக்காது. என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர்மன்ற உறுப்பினர் தம்பி கௌசிக் வந்திருக்கிறார். நான் அவருடைய வெற்றியை அங்கீகரிக்கிறேன். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன், இந்தப் பக்குவம் அறம் சார்ந்த அரசியல் இயக்கத்தில் நான் இருப்பதும், சிறு வயது முதல் நான் பார்த்து பழக்கப்பட்ட இந்த மணப்பாறை மண் தான் காரணம், கட்சிகளுக்குள் சண்டை இல்லை, சாதியாலோ, மதத்தாலோ சண்டை இல்லை எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரப் பாதுகாப்போம். மணப்பாறை மதநல்லிணக்கம் சார்ந்த மண் என்பதற்கு சாட்சியமாக, நமது சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது இங்கே அமர்ந்திருக்கிறார் அவருக்கும், நமது மணப்பாறைக்கும் என்ன தொடர்பு...? அவருக்கும் நமக்குமான பந்தம் என்ன...?

மணப்பாறை சாதி, மதம் கடந்த மண் என்பதால் தான், ஏதோ ஒரு திசையில் மனிதநேயம் மலர வேண்டும் என்பதற்காக  போராடிய போராளியை, நம் மக்கள் வெற்றி பெறவைத்திருக்கிறார்கள் அவரும் நம் ஊருக்காக நிறைய பாடுபடுகிறார் வாழ்த்துகிறேன்,

எனக்குத் தெரிய நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தில் தொழுகை பீடம் உள்ளது. அதற்கு முந்தைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பீடம் இருப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நான் கால் சட்டை அணிந்திருந்த சின்னஞ்சிறு பிராயத்தில், நரி இலந்தைப் பழம் பிடுங்க இப்பகுதிக்கு வருவோம் அறியாத வயதில் நிறைய இலந்தைப் பழங்கள் கிடைத்தால் பொய்கை மலைப் பெருமாளுக்கும், பாத்திமா மலை மாதாவுக்கும், இந்த பீடத்தில் இருக்கும் அல்லாவுக்கும் நான்கு பழங்களைப் போட்டுவிட்டுப் போவோம் அப்படி பழமையான திடல்தான் இந்த ஈத்கா திடல் இருபது வருடங்களுக்கு முன்பு மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு விழா திருப்பணிக்குழுவின் தலைவர் மறைந்த பெரியவர் மக்கள் மருத்துவர் அய்யா டாக்டர் லெஷ்மிநாராயணன் அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்த பின்புதான் தெரிகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ராஜகோபுரம் குடமுழுக்கு விழா என்பது மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பின்புறம் தான் பெரிய பள்ளிவாசல். அதன் பக்கத்தில் லூர்தன்னை தேவாலயம் குடமுழுக்கு விழாவுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் வருவார்கள், அப்போது பள்ளியில் தொழுகை நடத்த வருபவர்களுக்கு பாதிப்பு வருமே என பெரியவர் அஞ்சினார் சற்றும் யோசிக்காமல் பெரிய பள்ளி சென்று ஜமாத்தார்களிடம் அழைப்பிதழைக் காட்டி, தெரியாமல் நடந்து விட்டது என்ன செய்யலாம் எனக்கேட்டார் மாமா ஒன்றும் தவறு இல்லை நாங்கள் அழைப்பிதழை ஏற்கனவே பார்த்து விட்டோம் அப்போதே பாத்திமா மலை அருகில் உள்ள தொழுகை பீடம் (ஈத்கா திடல்) அங்கே தொழுகை நடத்தத் தீர்மானித்து விட்டோம் நீங்கள் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்துங்கள் என இசுலாமிய ஜமாத்தார் வாழ்த்தினார்கள், அதுமுதல் இங்கு தான் தொழுகை நடந்து வருகிறது. அத்தகைய சிறப்புக்குரிய ஈத்கா திடலில் இந்தாண்டு தான் முதன் முதலாக இப்தார் நோன்புத் திறப்பு விழா நடக்கிறது, நடுவில் சட்டமன்ற உறுப்பினர், பக்கத்தில் அதிமுக நகர்மன்றத் தலைவர், அருகில் கிறித்தவப் பங்குத் தந்தை அருள்திரு சுந்தர்ராஜ், அவர் அருகில் அடைக்கலம் பூசாரி இங்கு கட்சியும் இல்லை. மதமும் இல்லை. சாதி வேறுபாடும் இல்லை இந்தப் பண்பு இன்னும் நூற்றாண்டு கடந்தும் தொடரவேண்டும். மதநல்லிணக்க மாண்பு தொடர்வதற்கு எங்கள் மறுமலர்ச்சி திமுக பாலமாகத் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன், இப்தார் நோன்புத் திறப்பு விழாவின் வாயிலாக சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் வெற்றி பெற்று வந்தபோது நான் தந்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று எங்கள் பாத்திமா மலையில் குடியிருந்து வரும் பலருக்கும், முந்தைய திமுக ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது இன்னும் 125 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்து மணப்பாறை மக்களின் தேவைக்காக, நாம் என்றும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.

அதை தொடர்ந்து எம்.எல்.ஏ. அப்துல் சமது மணவை தமிழ்மாணிக்கம் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும். பாத்திமா மலை மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.



(மா) செய்தியாளர்

S.K. சபியுல்லா

Post a Comment

0 Comments